Search This Blog

Thursday, June 9, 2011

26. கூற்றுவ நாயனார்


களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார். அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழிய அரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார்.
மணிமுடி சூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழந்தணர்களைக் கேட்டார். அவர் சோழர் குல முதல்வர்களுக்கு அன்றி முடி சூட்டமாட்டோம் என்று மறுத்துத் தம்மில் ஒரு குடியை மணி முடியைக் காவல் செய்யும் படி வைத்து, இவராணைக்கு அஞ்சி சேர நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.
அது கண்ட கூற்றனார் மனம் தளர்ந்து “முடியாக உமது பாதம் பெற வேண்டும்” என்று ஆடவல்லானைப் பரவி, அந்நினைவுடன் துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருள, அவற்றைத் தாங்கி அவர் உலகினைத் தனியாட்சி புரிந்தனர். இறைவர் கோயிலெல்லாம் உலகுவாழப்பூசை புரிவித்தனர். இவ்வாறு உம்பர் மகிழ நல் அரசாட்சி புரிந்திருந்து உமையொருபாகர் திருவடி சேர்ந்தனர்.

No comments:

Post a Comment

Translate