Search This Blog

Friday, June 17, 2011

54. பெருமிழலைக் குறும்ப நாயனார்

பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை

சோழநாட்டின் உள்நாடாகிய மிழலைநாட்டிற் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர் மிழலைக்குறும்பனார் ஆவர். இவர் சிவனடியார்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர்; சிவபெருமான் திருவடிகளை நெஞ்சத்தாமைரையில் இருத்தி வழிபாடு செய்பவர். இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர். இவ்வாறு சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்து வாழும் மெய்யடியார்கள் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரர் பெருமையைக் கேள்வியுற்றார். அவரைப் பணிந்து அவருடைய திருவடிகளை நினைந்து போற்றுதலை நியமமாகக் கொண்டார். நம்பியாரூரர் திருவடிகளைக் கையால் தொழுது வாயால் வாழ்த்தி மனதால் நினைக்குங் கடப்பாட்டினால் இதுவே சிவபெருமான் திருவடிகளை அடைவதற்குரிய நெறியாகும் என்று அன்பினால் மேற்கொண்டார். நம்யாரூரர் திருபெயரினை நாளும் நவின்ற நலத்தால் அணிமா முதலிய அட்டமா (எட்டுவிதமான்) சித்திகளும் கைவரப்பெற்றார்.
இத்தகைய நியமங்களையுடையாராய்ப் பெருமிழலைக்குறும்பர் வாழ்ந்துவரும் நாளில், சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்திற் சென்று திருப்பதிகம் பாட அவருக்குச் சிவபெருமான் அருளால் வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக் காட்சியால் அறிந்து கொண்டார். “திருநாவலூரில் திருக்கயிலை எய்த நான் அவரைப் பிரிந்து கண்ணிற் கரியமணி கழிய வாழ்வார் போல வாழேன்” என்று எண்ணி ‘இன்றே யோகத்தால் சிவன் தாள் சென்றடைவேன்’ என்று சொல்லி. நாற்கரணங்களாலும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு, பிரமநாடிகளின் வழியே கருத்தைச் செலுத்த, யோக முயற்சிகளினாலே பிரமரந்திரம் திறப்ப, உடலின்றும் பிரிந்து திருக்கயிலை வீற்றிருந்து அருளும் சிவபெருமானது திருவடி நீழலை அடைந்தார்.

No comments:

Post a Comment

Translate