Search This Blog

Friday, June 17, 2011

59. மூர்க்க நாயனார்


மூர்க்கற்கும் அடியேன்” – திருத்தொண்டத்தொகை

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதிற் சிவனடிமைத் திறத்தில் சிறந்து வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியில் இடைவிடாமற் கடைப்பிடித்து வந்தார்.
இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால் தாம் முன்பு கற்ற நற்சூதினால் பொருளாக்க முயன்றனர். தம்மூரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.
பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம்வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது. நாடோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.
இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.

No comments:

Post a Comment

Translate