Search This Blog

Thursday, December 29, 2011

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -13


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

                குவளையின் கறுத்த மலராலும், தாமரையின் சிவந்த மலராலும், சிறிய உடலை உடைய வண்டுகள் செய்யும் ஒலியாலும், தம்முடைய குற்றங்களை நீக்க வேண்டுபவர்கள் வந்து தொழ, எங்கள் பிராட்டியான சக்தியும், எம்பிரான் சிவபெருமானும் இருப்பது போலக் காட்சியளிக்கும் நீர் நிறைந்த இம்மடுவில் பரவி அளைந்து, நாம் அணிந்துள்ள சங்குகள் சலசலக்க, சிலம்பு அத்துடன் இணைந்து ஒலிக்க, மார்பகங்கள் விம்ம, அளைந்தாடும் நீரும் விம்மி மேற்பொங்க, தாமரை மலர் நிறைந்த இந்நீரில் ஆடுங்கள் !


கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்; பங்கயம் - தாமரை; புனல் - நீர்.

No comments:

Post a Comment

Translate