Search This Blog

Wednesday, December 28, 2011

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -7


அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

 தோழியர்: அம்மா ! இவையும் உன் குணங்களில் ஒன்றோ ?! பலபல தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம் பெருமானின் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே "சிவ சிவ" என்று சொல்லுவாய். "தென்னாடுடைய பெருமானே" என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே தீயிலிட்ட மெழுகு போல உருகிவிடுவாய். எம்பெருமானை, "என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே !"
என்று நாங்கள் எல்லோரும் பலவேறு விதமாகச் சொல்லுகின்றோம். இன்னும் நீ தூங்குகிறாயோ ! (உணர்வற்ற) கடுமையான நெஞ்சம் கொண்டவரைப் போல சிறு அசைவும் இன்றிக் கிடக்கின்றாயே ! தூக்கத்தின் தன்மை தான் என்னே !


உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்; வாளா - சும்மா; பரிசு - தன்மை.

No comments:

Post a Comment

Translate