கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.
தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன. இசைக் கருவிகள் ஒலிக்க வெண்சங்கும்ணொலிக்கின்றது. ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின் பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த) பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ? அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ ! ஊழிகள் எல்லாவற்றிற்கும் முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !
குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி); கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்; ஏழை - பெண்(சக்தி).
No comments:
Post a Comment