Search This Blog

Wednesday, December 28, 2011

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -6

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.

 தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று, "நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்" என்று கூறிவிட்டு, வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா பொழுது புலரவில்லை ? வானுலகும், பூமியும், பிற எல்லாமும் அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கி நம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வானென நெடிய கழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத் தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் ! எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான  சிவபெருமானைப் பாடு !


நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்; ஊன் - உடல்.

No comments:

Post a Comment

Translate