Search This Blog

Thursday, December 29, 2011

திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -10

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே 
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்.


                அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக் கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; அவனுடைய மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப்புறத்தன; அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ ஒன்றிரண்டல்ல ! வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும் துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்; ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற குலப்பெண்களான சிவன் கோயிற் பணிசெய்யும் பெண்களே ! அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார் உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!


சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத; கோது - குற்றம்; பரிசு - வழி.

No comments:

Post a Comment

Translate