Search This Blog

Tuesday, November 24, 2015

மழையே !!!! என் மனமே!!!!!(2015-16)



மழையே !!!! என் மனமே!!!!!




மழையே …என் மனமே…!!!!!
சில நாட்களாக  உன்னைப் பற்றிய அங்கலாய்ப்புகளும்,
ஆதங்கங்களும் அரங்கேறிக் கொண்டும் .....
பவனியானது பல பரிணாம வளர்ச்சியில்
 வலம் வந்தும் கொண்டிருக்கிறது….
எனக்கு ஒரு ஐயப்பாடு என்பதை விட 
ஆதங்கமே மேலோங்கி இருக்கிறது…ஏனென்றால்,
நீ உனது பணியைச் செவ்வனே செய்கிறாய்.!!
இதற்கு நீ மட்டும் தார்மீகப்  பொறுப்பேற்க முடியாது….
நீ உன்னை அண்டியவரையும் 
உன் அருகாமையில் இருப்பவரையும் 
சார்ந்துதானே செயல்படுகிறாய்...
.மழையை மண்ணிற்குத் தருகிறாய்…
அப்படியிருக்கையில் இவர்களின் கேலிக்கூத்துக்கு
 நீ எவ்வாறு பொறுப்பாக முடியும்..!
நல்லது செய்தாலும் நாடு தூற்றும்.
செய்யவில்லை என்றாலும் செயலற்றுப் பேசும்.
இவ்விரண்டுக் கலப்பும் நிறைந்ததுதானே
நீயும் நானும் நிறைந்துள்ள .....
இப்பேரண்டத்தின் அடக்கம்.
அதற்கு   நீயும் நானும் விதிவிலக்கன்று…
இதே மானிடர்கள்தான்.....
 உனை வேண்டி வரமிருந்து
வருண பகவானாக நினைத்து 
யாக பூசைகள் செய்தும்...
வேள்விகள் செய்தும் வேண்டியவர்கள்
 இம்மானிடர்கள்தானே….
இவ்வாறு இவர்கள் வேண்டும்பொழுதெல்லாம்,
 நினைக்கும்பொழுதெல்லாம் 
வரம் கொடுக்க நீ ஒன்றும்
கர்ணனின் குலக்கொழுந்தன்று….
 வாரி வாரி வழங்கும் வள்ளல் பரம்பரையுமன்று…..
கைம்மாறு கருதாது… 
மாரி மும்மாரிப் பொழியும் என்று உன்னை 
ஆய்ந்து வகுத்தவர்களும்..
இதே முன்னோர்களன்றோ!!!!
அப்படியிருக்கையில், மழையே செல் என்றும்...
செல்வங்களெல்லாம் தத்தளிக்கிறது; 
தாங்காது பூமி எனக் கூக்குரலிடுவதால் 
என்ன பயன் விளையப் போகிறது??
மூட நம்பிக்கை கொண்டு உன்னை வரவழைக்க
யாக யோக தரிசனங்களைத் தவிர்த்து
தரிசான பூமியைத் தரம் பார்த்து 
தாரை வார்த்திருந்தால்....
மானிடர் வாழும் மண் கொழிக்கும்; 
மனித மனம் மணக்கும்... 
பூமியும்,சொர்க்க பூமியாகவுமல்லவா செழித்திருக்கும்!
நீயும் செழுமையடைந்த திருப்தியும் அடைந்திருப்பாய்..
மானிடனே! 
இப்பூமியை விட்டுச் செல்லும்போது 
எதைக் கொண்டு கோபுரம் கட்டப் போகிறாய்?
இறுதியில், கட்டெறும்புக்கும் 
கரையான்களுக்கும் அல்லவா இரையாகிறோம்?
அப்படியிருக்கையில், 
நான்கடி நிலத்துக்கு நாற்சந்தி யுத்தம்!!
இதனை நீ மட்டும் செய்யவில்லை மானிடனே –
உன்னை ஆளும்  அரசும் அதே கதிதானே????
‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’
‘தாயைப்போல பிள்ளை; நூலைப்போல சேலை…..
அதைப்போல்தான் இருக்கும் காலம் வரை 
ஒருவரை ஒருவர்...
முந்தியடித்து ஏய்த்துப் பிழைக்கும் உலகத்தில் 
ஏவலாளிகளாக.... ஏமாளிகளாக...
ஏவப்படுகின்றீர்கள்…. பல்வேறு தவறைச் செய்ய…
அத்தவறினால், பாடுபட்டு தேடிய செல்வமெல்லாம் 
பாழாய்ப் போகிறது பாழ் பூமியில் 
எனப் புலம்புவதால் என்ன பயன்???
விண்ணை வெற்றி கொள்ள விவசாயம் செய் என்றால் விரயம் பேசுகிறாய்!
விருட்சம் வேண்டுமென்றால் வீண்வம்பு பேசுகிறாய்…
வேண்டாத இடத்தில் வேண்டுமென்றே வீடு கட்டி
வேள்வி நடத்துகிறாய்!அதற்கு முன்…
முன்யோசனை உனக்கு அரசாங்கம் வழங்கியதா?
இல்லை அதைத்தான் கேட்டாயா?
இருவருமே அலட்சியப்போக்கின் 
உச்சக் கட்டத்தில் இருக்கும்போது ,
உச்சத்தில் இருக்கும் நீ உன் உன்னதப் பணியைத்தான் 
ஆற்றிக் கொண்டிருக்கிறாயே தவிர,….
மானிடனே! உன்னைப்போன்று 
ஆசை நோக்கோடு ஆர்ப்பரிக்கவில்லையே…..
மழையே …. என் மனதை….. 
அன்பு கொண்டு அழைக்க
அணைகள் கட்டவில்லை,
ஆறு,ஏரி,குளங்கள் அமைக்கவில்லை…
ஓடி ஒதுங்கும் ஓடு பள்ளங்களைக் காணவில்லை…
படுகுழிகளையும் காணடித்து 
பங்களாக்களையும்,பளிங்கு அறைகளையும்
பல அடுக்கு மாடமாளிகைகளையும்,
 கோபுரங்களையும் கட்டிய
கணவான்களே!!!
என் மழையின் இருப்பிடம் எங்கே???
பிறரின் பந்தத்திற்கும்,பாசத்திற்கும் அடிபணியாதவன்,
மதியாரைத் துற்றமென தூக்கி எறிபவன் …
.என் மனம் என்ற மழை…
மானிடனே! என் மனதை வருந்தி அழைத்தலும்,
வா என்று அழைத்தலும் 
உனது சுகபோகங்களுக்கு மட்டுமே…
பக்குவமில்லாத பச்சோந்தித்  தனமாகத் திரியும் உனது பேச்சை
பால்மனம் மாறா என் மழை
 எவ்வாறு மனம் கொடுக்கும் ....செவி மடுக்கும்……
வா என்றால் வரவும்; 
போ என்று கூற நீ ஒன்றும் புத்திமான் அல்ல..
என் மனம்(மழை) பலமான் என்பதை
 பாவிகளே புரிந்துகொள்ளுங்கள்!!!!
செய்வன திருந்தச் செய்!
 பின் சென்று செய்வதை உரைக்கச் சொல்!!!
அதை விடுத்து, புலம்பித் திரிவதும், 
புழுங்கி அழுவதும்….வீண் செயல்.
புல்லர் இன மானிடனே !! 
மனம் திற!மாயையை மற!! இதனை மற!!
என் மனமே! நீ என் மனமே!! 
காலத்தின் கோலத்தை.....
நீ கச்சிதமாகச் செய்!!!! ஆனால் ஒன்று…
ஏழையின் வீட்டிலும் அடுப்பெரிய வேண்டுமன்றோ!!!!!
ஏணியாய் இன்றியும், ஏகலைவனாய் இருந்து போதி….
போதும் இப்பொழுது உன் நீதி..!!!!!
என்றும் வாழும் உன் சேதி…..
மீண்டும் வருவாய்….என் மனமே !!! 
அமைதி கொள் !!! ஆன்றோர்கள் போன்று….
இன்னும் கனியும் காலம் வரும்…. காத்திரு … மீண்டும் வர…
என் மனதோடு உறவாட…………

                                                                                    ப. சித்ரகலா கலைச்செல்வன்.
 



No comments:

Post a Comment

Translate