Search This Blog

Tuesday, November 16, 2010

குறளோவியம்

அதிகாரம் - 53                சுற்றந்தழால்               பாடல் - 527

     காக்கை   கரவா   கரைந்துண்ணும்   ஆக்கமும் 
     அன்னநீ   ரார்க்கே   உள.


                         பிள்ளையார் கோவில் வாசலில் ஐந்தாறு இளைஞர்கள் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஒரு பக்தர் தேங்காயுடன் வந்தார். விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்; அவர் கையில் இருக்கிற தேங்காய் சூறைத் தேங்காய் என்பதை புரிந்து கொண்டு!

                          பக்தர் பிள்ளையாரை வணங்கிவிட்டு, அந்தத் தேங்காயை அங்கிருந்த கருங்கல்லின் மீது ஓங்கி அடித்தார். அது சுக்கல் சுக்கலாகச் சிதறிற்று. இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்து சிதறிய தேங்காய்த் துண்டுகளை பொறுக்கிட முற்பட்டனர். சிலருக்கு தேங்காய்த் துண்டுகள்; ஓரிருவருக்கு உடைந்து போன ஓடுகள்! ஓரு இளைஞன் கையிலே மட்டும் பெரிய மூடி சிக்கியது! அதை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி தொலைவில் உள்ள பாழ்மண்டபத்தில் ஏறி நின்று முழுவதும் அவனே தின்று தீர்த்தான். ஒரு சிறு தேங்காய்த் துண்டு கூட கிடைக்காத இளைஞர்கள் ஏமாந்து போய் நின்றனர். எல்லோருமே ஏழை வீட்டு இளந்தளிர்கள்தான். வறுமையில் வதங்கிப் போனவர்கள்தான். பெரிய தேங்காய் மூடியைத் தின்றுவிட்டு; எதுவும் கிடைக்காதவர்களைப் பார்த்து பழிப்புக் காட்டிக் கொண்டிருந்த இளைஞனிடம் அந்த பக்தர் சென்றார்.
   "தம்பி! நீ இப்படிச் செய்யலாமா? எவ்வளவு பிள்ளைகள் ஏங்கிப்போய் விட்டார்கள் பார்த்தாயா?"
என்று பரிவுடன் கேட்டார்.
   "என் திறமை எனக்குக் கிடைத்தது! அவர்கள் கையாலாகாததனத்திற்கு நானா பொறுப்பு?" என்று அந்த இளைஞன் பதில் சொன்னான்.
                        அப்போது அருகில் உள்ள ஒரு பெரிய வீட்டு வாயிற்புறத்தில் நாலைந்து எச்சில் இலைகளை வேலைக்காரி வீசி எறிந்து விட்டுச் சென்றாள். ஒவ்வொரு இலையிலும் சில பண்டங்கள் எஞ்சியிருந்தன. அந்த இலைகள் தெருவில் விழுந்ததை பசியோடிருந்த ஒரு காக்கை பார்த்து விட்டது. பறந்து வந்து இலையிடம் அமர்ந்தது. அடுத்த வினாடியே அது "கா! கா!" என்று கரையத் தொடங்கியது. கூட்டமாகப் பத்துப் பதினைந்துக் காக்கைகள் வந்து சேர்ந்தன. அவை ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் நிதானமாகவும் கட்டுப்பாடாகவும் அந்த இலைகளில் இருந்த பண்டங்களைத் தின்றன.

                        பக்தர் அந்த இளைஞனைப் பார்த்து சொன்னார், "தம்பி பார்த்தாயா? ஒரு சாதாரணப் பறவை இந்தக் காக்கை! இது கூடத் தனக்குக் கிடைத்த உணவை, அருந்தவேண்டுமென்ற எண்ணமில்லாமல் தன் இனத்தையே கூவிழைத்துப் பகிர்ந்துண்ணும் பண்பை பெற்றிருக்கிறது! இத்தகைய இயல்பு படைத்தவர்களுக்கே இந்த உலகில் உயர்வு உண்டு! எல்லாம் தனக்கே என்பவருக்கு ஆக்கமில்லை; அழிவேதான்! இதனை அறிந்து கொள்க தம்பி!" இப்படிக் கூறிவிட்டுப் பக்தர் சென்றதும் , அந்த இளைஞன்; தனது செயலுக்கு வருந்தி நாணித் தலை கவிழ்ந்து நின்றான்.


கதையின் நீதி:
     "தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவியழைத்துக் காக்கை உண்ணும். அந்த இயல்புடையவர்க்கே உயர்வு உண்டு உலகில்." என்கிறது குறள்.
_________________________________________________________________

No comments:

Post a Comment

Translate