Search This Blog

Monday, October 1, 2018

சுதந்திரக் காற்று உன் சுவாசத்திலும் வீசும்.




இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.

 நமது நாடு சுதந்திரம் அடைந்து ண்டுகள் பல கடந்து விட்டன.  அனைவருக்குமே ஆகஸ்ட் 15 ம்  தேதி விடுதலை நாள்.அதனால் ஆனந்தப் பள்ளு பாடுவதற்கேற்ற நாளாகி விட்டது. விடுதலை விழாக்களின் கொண்டாட்ட ஆரவாரங்களுக்கிடையிலே இந்த மண்ணில் வீசும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் தமிழனாக பிறந்த நமக்கு,  நாமே எத்தகைய வேதனைகளின் தொகுப்பாக இருக்கிறோம் என்பதை, இங்கே நம்மில் எந்தனை பேர் எண்ணிப் பார்க்கத் துணிகிறோம். ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பாடமாக இருக்கும்இருக்க வேண்டும் என்பதால். இன்று என்னால் முடிந்த சுதந்திரக் காற்றை சுழல வைக்க என்ன செய்ய காத்திருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்? எதனைச் செயல்படுத்த வேண்டும் என்பதே இச்சுதந்திர நன்னாளின் என் முகவுரை.
கண்ணீரும் செந்நீரும் ஊற்றி
உடல் உயிர் உரமாக்கி வளர்த்தோம் இது
விடுதலையின் விருட்சம்.
ஓங்கியே வளர்ந்தது ஒப்பற்ற விருட்சம்
கிளைகள் பரந்தன பூக்களும் மலர்ந்தன
காயாகிக் கனிதந்த காலத்தோடு வாழ்ந்தும் கொண்டிருக்கிறோம். எனக்கு இந்த நாள் கொடுத்த மரியாதை,
எல்லா நாட்களிலும் கிடைக்காதா? - என்று ஏங்குகிறது. எனக்கு மட்டுமல்ல..ஒவ்வொரு தேசப்பற்று கொண்டுள்ளவனுக்கும் இது ஓங்கும்.
இந்த மண்ணில் பிறந்த அனைவருமே ஒரே விதமான உணவுதான் உண்ணுகிறோம்.. ஆனால், ஒருவன் சுதந்திர உணவை உண்ணுகிறான், மற்றொருவர் அரசாங்கத்திடம் பதவிக்காக கையேந்தி, வாய்பொத்தி பதவியைக்காப்பதிலே நீர் பாசியாக வாழ்கிறான். நீரிலே தோன்றி, அந்த நீரிலே வேர் பிடித்துக்கொண்டு நீரையே மறைத்து விட்டு, தன்னையே உயர்த்திக்காட்டும் நீர்பாசியைப் போலசில மனிதர்களும் இந்த மண்ணிலே வாழத்தான் செய்கிறார்கள்
இந்த பூமி உனக்கு கொடுத்ததை
உன்னால் உணர முடியாவிட்டால் - இந்த
பூமிக்கு நீ பாரம்
இந்த சுதந்திரத்தால் இந்திய சமுதாயம் அடைந்த நண்மை என்ன? சுதந்திரத்தை நாம் விரும்பிதான் அடைந்தோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அப்படியிருக்கையில்,
செடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை
ஜெகமறிந்து கொள்ள முன்பு செய்த திந்த நாடடா!
முடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்?

பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், வாகனநெரிசலின் போது, போக்குவரத்து விதிகளைமீறுபவர்கள், அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டுபவர்கள், கழிவுநீரை பொது இடங்களில் விடுபவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், வேலை நேரத்தில் தங்கள் கடமையை செய்யாதவர்கள் என்று,"சுதந்திரத்தைக் கையில்' எடுத்துக் கொண்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.நாடு வல்லரசாக வேண்டும், பொது இடங்கள் "அமெரிக்கா' போன்று இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்களுடைய கடமையைமுழுமையாக நிறைவேற்றுகிறோமா என்று ஒருநிமிடம் யோசிக்கலாம்.
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
சாலைகளில்...: பலர் சரியான தடத்தில்தான் செல்கிறோமா என்பதைக்கூட கவனிப்பதில்லை. உரிய இடத்தில் "யூ டர்ன்' செய்ய பலருக்கு சோம்பேறித்தனம். குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் செல்வதில்லை. சிவப்பு எரியும் போதுநிற்பதில்லை. மஞ்சள் விளக்கு எரியும் போதே சென்று விடுவது.பலர் இண்டிகேட்டரை பயன்படுத்துவதே இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்கள் பயன்படுத்துபவர்களையே "குற்றவாளிகள்' போல் பார்ப்பது. இரவில் முறையாக ஹெட்லைட் பயன்படுத்தாமல் செல்வது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது என்று சாலைப் பயணத்தை மனவேதனைப்படுத்தும் விஷயங்களாக மாற்றியிருக்கிறோம். அதிலிருந்து மாற வேண்டும்.சாலையில் நடந்து செல்லும் போது கூட, மொபைல் பேசக்கூடாது. அது பெரிய ஆபத்தில் முடியும். அதேபோல் சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்வதுஅப்பகுதியை நோய்க்கிருமிகளின் கிடங்காகமாற்றுவதோடு, அதன் வழியே சென்றுவரும்பயணிகளுக்கு "இலவசமாக' அந்த இடம் நோய்களை வழங்கத் தொடங்கிவிடும். இவ்வாறு,
சமுதாயம் என்பது ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருப்பது. மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலை இப்போது உருவாகி வருகிறது என்றே கூற முடியும். பஸ், ரயில், விமானப் பயணங்கள் சில நேரங்களில் நம்பும்படியாக இல்லை. நாம் நமது நாட்டின் தலைசிறந்த தலைவர்கள் மற்றும் அவர்கள் நடந்த வழி ஆகியவற்றை பின்பற்றி நமது நல் ஒழுக்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இன்னொரு பிரச்னை, வரிசையை தவிர்ப்பது. மேலைநாடுகளில் பொதுவாக, நான்கு பேர் கூடினால் கூட, அவர்களாக வரிசை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு கோயில் திருவிழா அல்லது பஸ் ஸ்டாண்டில் உள்ள கூட்டத்தினருக்கு வரிசை அமைக்க போலீசார்வரவேண்டியிருக்கிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில், வரிசை என்பது மிக முக்கியம். இல்லாவிட்டால்,முதலில் வந்தவர் கடைசியில் கூட அவருக்குரியதை பெற முடியாமல் போய்விடும். வரிசையில் செல்வோருக்கு இடையில் புகுந்துவிடுவது.வரிசையில் தெரிந்தவர் இருந்தால் அவர் தலையில் தனது சுமையைக் கட்டுவது
வயதானோர், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இருக்கை மற்றும் வரிசையில் இடம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
வர்த்தகத்தில்... : சரியான பொருளுக்கு உரிய விலை நிர்ணயித்துள்ளோமா?. பொருள் தரமானதுதானா? உபயோகிப்பாளரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறோமா? விற்பனையாகும் பொருள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதுதானா? என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.இந்த நாட்டின் சுதந்திரம் நமக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும்தான் என்ற உணர்வு ஏற்பட்டால்தான் உண்மையான சுதந்திரத்தின் சுவாசத்தை எல்லோரும் அனுபவிக்கமுடியும்.
ஒருவன் அடிமை என்றால் அதற்கு அவனே பொறுப்பாளி. அடிமையில்லை என்று உறுதி செய்து கொண்டால், அந்தக் கணமே சுதந்திர மகான் ஆகிவிடுவான்..இது தான் உண்மை நிலையென உணர்வோம்.
"நான் பெரிது நீ பெரிது அல்ல
நம் நாடே பெரிதேன்றான்" பெரியோன்
நாமோ இன்றும் யார் பெரிது
என்றே நிற்கின்றோம்.
சுயநலத்தை,ஆணவத்தை
சற்றே ஒதுக்கிவிட்டு எழுந்திருங்கள்.


கண்டிப்பாக சுதந்திரக் காற்று உன் சுவாசத்திலும் வீசும்.





No comments:

Post a Comment

Translate