நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் ப்ண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய்!
விளக்கம்:
"நோன்பு நோற்றுச் சுவர்க்கம் அடைய விரும்பிய பெண்ணே! வாசல் கதவைத்திறக்காவிட்டாலும் ஒரு வார்த்தையும் பேசலாகாதோ? மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த முடியை உடையவனும், அனைத்து உயிர்களை காப்பவனும், நம்மால் வணங்கப்பட்டு நமக்கு வேண்டிய பலன்களைத் தரும் தர்ம பரிபாலகனுமான நாராயணனால் ராமவதாரத்தில் வதம் செய்யப்பட்ட கும்பகர்ணன், தனக்கே உடமையாகிய பெருந்தூக்கத்தை உன்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டானோ? மிகுந்த சோம்பலும் உறக்கமும் உடையவளே! எங்களுக்கு அணி போன்றவளே! தூக்கம் தெளிந்து, கதவைத் திறப்பாயாக!"
No comments:
Post a Comment