விளக்கம்:
மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.
சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம்.
மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம்.
ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. டி.டி பாசு அவர்கள் மனித உரிமைகளை வரையறுக்கும் பொழுது "எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.
வரலாறு
மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.
1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்". பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன.
இவற்றுள், கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான அசோகன் வெளியிட்ட அசோகனின் ஆணை எனப்படும் ஆணையும்; கிபி 622 இல் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
“எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களைப் படைத்தவன் உயிர்வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்ற அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகள் சிலவற்றை அவர்களுக்கு அளித்துள்ளான் என்னும் உண்மைகள் தாமாகவே விளக்கம் பெறுகின்றன எனக் கொள்கிறோம். ”
−ஐக்கிய அமெரிக்க விடுதலைக்கான அறிக்கை, 1776
20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல குழுக்களும், இயக்கங்களும் மனித உரிமையின் பெயரால் பலவகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. மேற்கு ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, மிகக்குறைந்த வேலை நிலைமைகளை நிலைநாட்டுதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பெண்ணுரிமை இயக்கங்களால் பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டு விடுதலை இயக்கங்கள் பல குடியேற்றவாத அரசுகளை வெளியேற்றி விடுதலை பெற்றுக்கொண்டன. இவற்றுள் மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமானது.
உலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன. முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வெர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் நாடுகள் சங்கம் உருவானது. இச் சங்கம், ஆயுதக் களைவு; கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராசதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது.
1945 ஆம் ஆண்டு உலகப் போர்களைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்பு நாடுகளும் ஈடுபட்ட கலந்துரையாடல்களும், உருவாக்கிய சட்ட அமைப்புக்களுமே இன்றைய அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், அனைத்துலக மனைத உரிமைகள் சட்டம் என்பவற்றில் உள்ளடங்கியுள்ளன.
அடிப்படை மனித உரிமைகள்
ü வாழும் உரிமை - Right to life
ü உணவுக்கான உரிமை - Right to food
ü நீருக்கான உரிமை - Right to water
ü கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமை
ü சிந்தனைச் சுதந்திரம்
ü ஊடகச் சுதந்திரம் - Freedom of the press
ü Freedom of information
ü சமயச் சுதந்திரம் (Freedom of religion)
ü அடிமையாகா உரிமை
ü சித்தரவதைக்கு உட்படா உரிமை
ü தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம்
ü ஆட்சியில் பங்குகொள்ள உரிமை
ü நகர்வு சுதந்திரம்
ü கூடல் சுதந்திரம் - (Freedom of assembly)
ü Freedom of association
ü தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம்
ü கல்வி உரிமை
ü மொழி உரிமை
ü பண்பாட்டு உரிமை
ü சொத்துரிமை
ü Privacy
அடிப்படை உரிமை சார்ந்த சில விளக்கங்கள்
சொத்துரிமை
சொத்து உரிமை என்பது ஒருவர் அல்லது ஒரு குழு நேர்மையான வழியில் உழைத்த சொத்துக்கான உரிமை ஆகும். சொத்தின் சொந்தக்காரர் அந்தச் சொத்தை நுகர, விற்க, வாடகைக்குவிட, பிறருக்கு கையழிக்க, அழிக்க உரிமை பெறுகிறார். ஆதனச் சொத்து (நிலம், வீடு), தனிநபர் சொத்துக்கள் (வாகனம், உடை போன்ற பொருட்கள்), அறிவுசார் சொத்து, பொதுச் சொத்து என்று பல்வேறு வகையான சொத்துக்கள் உள்ளன.
மொழி உரிமை
மொழி உரிமை என்பது ஒருவர் எந்த ஒரு மொழியிலும் தொடர்பாடுவதற்கான உரிமையாகும். இது ஒரு அடிப்படை மனித உரிமையாக உலக மனித உரிமைகள் சான்றுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி உரிமை
கல்விக்கான உரிமை என்பது ஐக்கிய நாடுகளால் அதன் மனித உரிமைகள் சான்றுரையில் பிரகடனத்தப்பட்ட அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். இது ஒரு மனிதர் இலவச அடிப்படைக் கல்விக்கும், அணுக்கம் உள்ள உயர் கல்விக்கும் உரிமை பெறுவதாக இந்த உரிமை எடுத்துரைக்கிறது
கூடல் சுதந்திரம்
கூடல் சுதந்திரம் என்பது பிற மனிதர்களுடன் கூட, கூடி கருத்து வெளிப்படுத்த, பரப்ப, செயற்படுவதற்கான சுதந்திரம் ஆகும். இது ஒரு அடிப்படை மனித உரிமையாக, அரசியல் சுதந்திரமாக, குடியுரிமையாக கருதப்படுகிறது.
தன்னாட்சி உரிமை
தன்னாட்சி உரிமை (Self-determination) எனப்படுவது சுயமாக, சுதந்திரமாக ஒரு மக்கள் குழு தமது அரசியல் ஏற்பாட்டை தீர்மானிக்கும் உரிமையைக் குறிக்கின்றது. தன்னாட்சி உரிமை என்ற சொற் தொடருக்கு பதிலாக சுயநிர்ணய உரிமை என்ற சொற் தொடரும் பயன்பாட்டில் உண்டு.
சமயச் சுதந்திரம்
சமயச் சுதந்திரம் என்பது தனி நபர்கள் அல்லது குமுகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாக நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கு, வழிபடுவதற்கு, சடங்குகளை நடத்துவதற்கு ஆன சுதந்திரம் ஆகும். இது எந்த ஒரு சமயம் அல்லது இறைவன் தொடர்பாக நம்பிக்கையை வைத்திருக்காமல் இருப்பதற்குமான சுதந்திரமும் ஆகும்
ஊடகச் சுதந்திரம்
ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும். சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரம் ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம், நிகழ்த்தல், பல்லூடகம், அலங்காரம், நம்பிக்கைகள், இணையம் என பல்வேறு வடிவங்களிலும் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்களை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, பகிர ஆகியவற்றுக்கான சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும்
நகர்வுச் சுதந்திரம்
நகர்வுச் சுதந்திரம், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன. இது ஒரு நாட்டின் குடிமக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறுதல், எங்கே அனுமதிக்கப்படுகிறார்களோ அங்கு பயணம் செய்தல், உரிய ஆவணங்களுடன் எந்நேரமும் நாட்டுக்குத் திரும்பி வருதல் என்பவற்றுடன், குறித்த நாட்டுக்குள்ளேயே தாம் விரும்பிய எந்த இடத்துக்குச் செல்வதற்கும், வாழ்வதற்கும், அங்கே வேலை செய்வதற்குமான உரிமைகளைக் குறிக்கிறது.
சுயநிர்ணய உரிமை
சுயம் - என்பது ஒரு தேசிய சமூகம் சுயமாக தனது தலைவிதி எதுவாக இருக்காலாம், தான் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியல் வடிவம் எதுவாக இருக்கலாம் என்பதைப் பற்றி தானே சுயமாக முடிவெடுப்பது மட்டுமல்ல, அம்முடிவுகளில் தலையிடும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது என்பதையும் குறிக்கிறது.
நிர்ணயம் - என்பது அதனை நிர்ணயிப்பது வேறு யாருமல்ல அந்தந்தத் தேசிய சமூகங்களே என்பதைக்குறிக்கிறது
உரிமை - என்பது இது ஒவ்வொரு தேசியத்திற்கும் உள்ள பிற்ப்புரிமையே தவிர சலுகை அல்ல என்பதைக் குறிக்கிறது.
ஆகவே சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய சமூகமும் தனது அரசியல் தலைவிதியை, தான் சுதந்நிரமாக வாழும் அரசியல் வடிவத்தை தானே தீர்மானிக்கும் உரிமை உடையது என்பதைக்குறிக்கிறது. இது பிரிந்து போகும் உரிமையை உள்ளடக்கியதாகும்.
குழந்தைகள் உரிமை
· · மனித கண்ணியத்துடன் வாழும் உரிமை.
· பெற்றோரின் பராமரிப்பில் வாழும் உரிமை.
· இனம், நிறம், பால், தேசியம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடில்லாமல் வாழும் இயல்பான உரிமை.
· ஆரோக்கியமான முறையில் வளர வசதிகளையும், வாய்ப்புகளையும் பெறும் உரிமை.
· ஆளுமையை வளர்க்கக் கல்வி பயிலும் உரிமை.
· சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்லும் உரிமை.
· தேசியத்தைப் பெறும் உரிமை.
· சுரண்டலிலிருந்தும், உடல், மனரீதியான கொடுமைகளிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமாக உள்ள உரிமை.
மனித உரிமை நீதிமன்றங்கள்
மனித உரிமைகள் மீறப்பட்டதிலிருத்து எழும் குற்றச் செயல்களை விரைந்து விசாரணை செய்ய ஏதுவாக மாநில அரசால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒருங்கிணைவுட்ன சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க சட்டம் வழிவகை செய்துள்ளதின்படி அமைக்கபெற்ற சிறப்பு நீதிமன்றங்கள் இவ்வழக்குகளை விசாரணை செய்யும். சிறப்பு மனித உரிமையியல் நீதிமன்றங்கள் என இந்நீதிமன்றங்கள் அழைக்கப்படும். சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் அரசின் சார்பில் இவ்வழக்குகளை மேற்க்கொள்வார்.
புகார்கள் அனுப்புவது
தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ எட்டவாது அட்டவணையில் கூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
v புகார் மனுவுக்கு கட்டணம் கிடையாது.
v புகாரில் முழுமையான விவரத்தை தெரிவித்தல் வேண்டும்.
v ஆணையம் புகார் சம்பந்தமான கூடுதல் தகவல்களை கேட்டுப் பெறலாம். புகார்களை பிரமாணப் பத்திரம் (அபிடாவிட்) மூலம் அளிக்குமறு சொல்லலாம்.
v தந்தி மற்றும் தொலை நகல் மூலம் அனுப்பும் புகார்களை சற்று எச்சரிக்கையுடன் ஆணையம் ஏற்றுக்கொள்கின்றது.
ஆய்வு
ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு. செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது
உலக மனித உரிமைகள் நாள்
உலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
useful information
ReplyDelete