Search This Blog

Tuesday, December 21, 2010

கலைஞரின் குறளோவியம்

        ஒருநாள் மாலைப்பொழுது! ஏரிக்கரை ஓரமாக வள்ளுவர் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். ஆழ்ந்த சிந்தனை. சற்று நிற்பார். மீண்டும் நடப்பார். அவரைக் கடந்து இருவர் ஏதோ வாயாடிக்கொண்டு போயினர்.
        "யாரப்பா இந்த ஆள்? எப்போது பார்த்தாலும் ஏரிக்கரை, குளக்கரை, மலைப்பாறை என்று அலைந்து கொண்டேயிருக்கிறான்; வானைப் பார்க்கிறான்; பூமியைப் பார்க்கிறான்; நெற்றியைச் சுருக்குகிறான், யார் இது?
        இப்படி ஒருவன் கேட்க, மற்றொருவன் ஏளனமாக விளக்கமளித்தான், “வள்ளுவனாம்! அதிலும் சாதாரண வள்ளுவன் இல்லையாம்! திருவள்ளுவனாம்! சிந்திக்கிறானாம், அறநூல் எழுதுகிறானாம் கிறுக்கன்! எத்தனையோ பித்தர்களில் இவனும் ஒரு பித்தன்”.

        சிந்தனை கலைந்தது வள்ளுவப் பெரியாருக்கு! செவியில் விழுந்தது அவர்கள் வாரியிறைத்த வசைமொழி! இழிமொழி! அவர்களைத் திரும்பிப் பார்த்தார். அவர்கள் வள்ளுவரை நோக்கி ஏகடியம் செய்துகொண்டே போய்விட்டனர். ஏரியோரத்தில் சிலர் கழனி வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். நிலத்தை வெட்டிக் கொண்டிருந்தனர் ஒரு பகுதியில்! கழனியில் உழுது கொண்டிருந்தனர் ஒரு பகுதியில்! கிண்று தோண்டிக் கொண்டிருந்தனர் மற்றொரு பகுதியில்! அனைத்தையும் பார்த்த வள்ளுவருக்கு ஒரு அழகான உவமைக் குறள் கிடைத்தது.
        தன்னை வெட்டியும் தோண்டியும் புண்படுத்துகிறவரையும் நிலம் பொறுத்துக் கொண்டு அவர்களையும் தன்மீதே தாங்கி நிற்கிறதல்லவா? அதைப் போலத்தான் நம்மை இகழ்ந்து பேசுகிறவர்களையும் பொறுத்துக் கொள்வது நம் தலையாய பண்பாகும்” என்று தனக்குத்தானே வள்ளுவர் சொல்லிக் கொண்டார். குறள் பிறந்துவிட்டது,
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

அதிகாரம்- 16          பொறையுடைமை            பாடல்- 151


No comments:

Post a Comment

Translate