Search This Blog
Thursday, December 30, 2010
மார்கழி 15 - பாடல்+பொருள்
எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோரெம்பாவாய்.
விளக்கம்:
குறிப்பு: சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம்.
[எழுப்புபவர்] "இளங்கிளி போன்ற சொற்களையுடையவளே! இன்னமும் உறங்குகின்றாயோ?"
[எழுந்திருப்பவர்] "என் தோழிகளே! 'சில்' என்று மிக்க கூச்சலிட்டு என்னை எழுப்பாதீர்கள்". புறப்பட்டு வருகின்றேன்"
[எழுப்புபவர்] "பேச்சு வன்மையுள்ள உன் உறுதிமொழியையும் உன் பேச்சு திறனையும் நாங்கள் நன்கு அறிவோமே"
[எழுந்திருப்பவர்] "நீங்கள்தான் பேச்சுத்திறமையுடையவர்கள். அல்லது, நீங்கள் கூறும்படி நானே வல்லவளாக இருக்கட்டும்"
[எழுப்புபவர்] "சீக்கிரம் எழுந்துவந்து எங்களுடன் கலந்து கொள். வேறு எதை நினைத்து, இன்னும் எழுந்திராமல் இருக்கிறாய்?"
[எழுந்திருப்பவர்] "எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா?"
[எழுப்புபவர்] "எல்லாரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிக்கொள். குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் என்னும் பகைவர்களின் க்ர்வத்தை அழித்து, நம் அனைவரையும் மாயையில் வீழ்த்துபவனின் புகழைப் பாட காலம் தாமதியாது விரைவில் எழுந்துவா."
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment