பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்
விளக்கம்:

"உறங்கும் பெண்ணே! பறவைக் கூட்டங்கள் எழுப்பும் சப்தத்தை கேட்டாயோ? கருடனை வாஹனமாகக்கொண்ட விஷ்ணுவின் ஆலயத்தில் திருப்பள்ளியெழுச்சிக்கு அனைவரையும் அழைக்கும் சங்கின் பெரிய சப்தத்தை நீ கேட்கவில்லையோ? இளம் பெண்ணே! எழுந்திருப்பாயாக. பூதனா என்னும் அரக்கி, தாய் உருவம் கொண்டு, தனது முலைகளில் நஞ்சு தடவிக்கொண்டு, கண்ணனுக்குப் பால் ஊட்டுகையில், அதை அறிந்த கண்ணன், பாலையும் அவள் அளித்த விஷத்தையும் உண்டு, அந்த அரக்கியின் உயிரையும் குடித்தான். பின்னர், வஞ்சனையுடன் வண்டி உருவில் வந்து கண்ணன் மேல் சாய்ந்து கொல்ல முயன்ற சகடாகரன் என்னும் அரக்கனை, தன் சிறு கால்களால் உதைத்து, அவ்வண்டியைக்கவிழ்த்து, அவ்வசுரனைக்கொன்றவனும், திருப்பாற்கடலில் பாம்பின் மீது சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவை முனிவர்களும் யோகிகளும் தங்கள் உள்ளத்தில் அவனை நினைத்துக்கொண்டு, 'ஹரி, ஹரி' என்று எழுப்பும் பேரொலி, எங்கள் உள்ளத்தில் புகுந்து, குளிர்ந்துள்ளது. அதனைக்கேட்க, நீயும் எழுந்திராய்!
No comments:
Post a Comment