Search This Blog
Wednesday, December 15, 2010
திருப்பாவை
மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், 'மார்கழி நோன்பு'. ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) 'திருப்பாவை' யும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை' யும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை. திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழிமாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்திருந்த பெரியாழ்வார் வீட்டு துளசி மாடத்தில் கண்டெடுக்கப்பெற்று, அவரால் வளர்க்கப்பட்டவர் ஸ்ரீ ஆண்டாள். பெரியாழ்வார் கண்ணபிரானை பெருந்தெய்வமாக கருதி, அவர்மீது பல பாடல்களைப்பாடியுள்ளார். அவைகளை தினமும் கேட்டு வளர்ந்த ஆண்டாள், தானும் கிருஷ்ண பக்தியில் அளவிலா ஈடுபட்டு, கண்ணனிடம் தெய்வீக காதலும் கொண்டு, அவரை மணக்கவும் ஆசைப்பட்டாள். தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, 'பாவை நோன்பு' நோற்றாள். அப்பொழுது அவர் பாடிய முப்பது பாடல்களை 'திருப்பாவை' என்றும், தான் கண்ணனை மணப்பதாக கனவு கண்டு பாடிய 143 பாடல்களை 'நாச்சியார் திருமொழி' என்றும் கூறுவர். பின்னர் ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதனையே சென்றடைந்து, அவருடன் இரண்டறக்கலந்தார்.
இனி திருப்பாவை பாசுரங்களையும், அவற்றின் பொருளையும் இனி வரும் நாட்களில் பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment