Search This Blog

Sunday, December 19, 2010

மனித நேயம்


"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார். அவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்தியவர். அதுபோல் திருவள்ளுவர்

"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு"


என்று அன்புணர்வின் உன்னதத்தை சித்தரிக்கிறார்.

உயிரோடு கூடிய உடம்பு அன்பு வழியில் இயங்குவதாகும். அவ்வன்பில்லாதவர்களுக்கு உள்ள உடம்பானது எலும்பைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பாகும்.

மேலும், கனியன் பூங்குன்றனார்

"யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகளாவிய அறைக்கூவலை விடுக்கிறார்."

மதங்கள் அனைத்தும் அன்பையே முதன்மைப் படுத்தி போதிக்கின்றன. அன்பே கடவுள் என்கின்றன. ஆனால் மனிதன் நாகரிகம் வளர வளர புற உலக வாழ்க்கையில் ஈடுபட்டு தன்னை மறந்தான். பொருளாதார போராட்டத்தில் மனித நேயம் பறந்து போயிற்று.

எதிலும் ஒரு எதிர்பார்ப்பு கொண்டு வாழ்கிறான். இதனால் பரிசுத்தமான அன்பைக் கூட பாசாங்கு போலவே நினைக்கத் தோன்றுகிறது.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள் வாழ்ந்த நம் தேசத்தின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது.


மனித நேயத்துடன் செயல்படுபவர்கள் போல் செயல்பட்டு சிலர் மக்களை ஏமாற்றுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு அண்டை வீட்டாரின் தொடர்புகள் சொல்லும் அளவுக்குக்கூட இல்லை. யாரோ வேற்றுக் கிரக மனிதனைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றனர். வீட்டிலுள்ள பெரியவர்களை சுமையாகக் கருதுகின்றனர். பெரியோர்களை மதிக்கும் தன்மை அறவே இல்லை. மனித வாழ்க்கையின் பாதி நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி முன்னே கரைந்து போய்க்கொண்டிருக்கிறது.


பொருளாதார ஏற்றத்தாழ்வு மனித நேயத்தை அழிக்கும் கிருமியாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலைக்குக் காரணம் பெரியோர்கள், வீட்டிலிருக்கும் மூத்தவர்களின் வழிகாட்டுதல் இல்லாமையே.

பழங்காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். பெரியோர்கள் தங்களின் அனுபவ உண்மைகளை ஆராய்ந்து சொல்லும் அறிவுரைகள் எல்லாம் நலம் பயப்பதாகவே இருந்து வந்தது. இதனால் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அனைவரிடமும் அனுசரித்து நட்பு பாராட்டி சிறந்த பண்புடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றோ குழந்தை பிறந்தவுடன் கிரச் (குழந்தைகள் காப்பகம்) சுக்கு அனுப்பிவிடுகின்றனர். அந்த குழந்தைகள் பெரியோர்களின் அன்பில் அரவணைப்பில் வாழவில்லை. பெரியோர்கள் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். அனால் அவர்களுடன் அன்பு பாராட்ட நேரமில்லாமல் இருக்கின்றனர்.

மனிதனை மனிதனாக மதிப்பதில்லை. ஒருவரை ஒருவர் நம்பும் சூழ்நிலை இல்லை. அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மறக்கப் பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. மனித மனமானது அதிக வருமானம், கட்டுக்கட்டாய்ப் பணம், பேராசை, முறைகேடான உறவுமுறைகள், பதவி மோகம், கேளிக்கை விளையாட்டுகள் என ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தேடி ஒரு வேட்டை நாயைப்போல அலைகிறது. ஆரறிவு படைத்த மனிதர்கள் உறவுகளை மறந்து, அன்பை மறந்து அரக்கத்தனமான வாழ்க்கைக்கு ஆயத்தமாகி விட்டனர்.

இதுபோல் இன்று நாளிதழ்களை புரட்டினாலே கொலைச்சம்பவங்கள் பற்றிதான் அதிகம் இருக்கின்றன. போதிய அன்பு கிடைக்காமலும், மனிதத் தன்மை இல்லாமலும் இருப்பதால் ஏற்படும் விபத்துக்கள்தான் இவை. இந்நிலை மாற, எதிர்கால சமுதாயத்தை வலுவாக உருவாக்க பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு அன்பு, நேசம், பிறருக்கு உதவும் தன்மை போன்றவற்றை எடுத்துக் கூறிவரவேண்டும். பெரியோர்களை மதிக்கச் செய்யவேண்டும். பள்ளிகள் வெறும் பாடங்களைப் போதிக்கும் கூடங்களாக அல்லாமல் பாடத்துடன் மனித நேயத்தையும் போதிக்கும் ஒரு கல்விச் சோலையாக மாறவேண்டும். நமது புராணங்களில் வரும் கதாபாத்திரங்களையும், குட்டிக் கதைகளையும் சொல்லி அதிலுள்ள நல்ல விஷயங்களை அவர்களுக்கு புரிய வைத்தால் எதிர்கால சமுதாயம் மனித நேயம் மிக்க சமுதாயமாக மாறும்.

பக்கத்துவீட்டுக் காரர்கள், அண்டைவீட்டுக் காரர்களுடன் உறவு பாராட்ட வேண்டும். இன்றும் கிராமங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவதைப் பார்த்திருக்கலாம். படித்த நகர மக்களிடையே மனித நேயம் வளரவேண்டும். குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை குறைக்க வேண்டும். இயற்கையின் அற்புதங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தால் மனித நேயத்துடன் இயற்கையையும் காக்கும் காவலர்களாக எதிர்கால சமுதாயம் விளங்கும் என்பது நிதர்சனமான உண்மை.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தத்துவக் கோட்பாட்டின்படி மக்கள் வாழ்ந்தால் மனித நேயம் தழைத்தோங்கும்.

No comments:

Post a Comment

Translate