Search This Blog

Monday, January 10, 2011

எனக்குப் பிடித்த சில பாரதியின் பாடல்கள்

1.பாரதியாரின் நாட்டுப் பற்று

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)


2.பாரதியாரின் தமிழ் மொழிப் பற்று

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.



யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞ்ர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்க்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.


3.உலகத்தை நோக்கி வினவுதல்

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 1

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? 2

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? 3

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம். 4


4.கண்ணன்-என் காதலன்

தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சத் துடித்த தடீ!

கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது
வெறுத்து விட்ட தடீ!

பாயின் மிசை நானும்-தனியே
படுத் திருக்கையி லே,
வாயினில் வந்ததெல்லாம்-சகியே!
தாயினைக் கண்டாலும்-சகியே!
சலிப்பு வந்த தடீ!

வளர்த்துப் பேசிடு வீர்;
நோயினைப் போலஞ்சி னேன்;-சகியே!
நுங்க ளுறவையெல் லாம்.

உணவு செல்லவில்லை;-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே!
மலர் பிடிக்கவில்லை;

குண முறுதி யில்லை;-எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்த தில்லை.

பாலுங் கசந்ததடீ!-சகியே!
படுக்கை நொந்த தடீ!
நாலு வயித்தியரும்-இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலந்துச் சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்.

கனவு கண்டதிலே-ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றா மல்,
இனம் விளங்க வில்லை-எவனோ
என்னகந் தொட்டு விட்டான்,
வினவக் கண் விழித்தேன்;-சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில மட்டிலுமே -புதிதோர்
மகிழ்ச்சி கண்ட தடீ!

உச்சி குளிர்ந்ததடீ;-சகியே!
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்
மனத்துக் கொத்த தடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும்
இன்பம் விளைந்த தடீ;
அச்ச மொழிந்த தடீ;-சகியே!
அழகு வந்த தடீ!

எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை
இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்ற தடீ!

5.கண்ணம்மா-எனது குல தெய்வம்
பல்லவி
நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணங்கள்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று          (நின்)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று           (நின்)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு 
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்           (நின்)

துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட           (நின்)

நல்லதுதீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!          (நின்)


6.கண்ணன்-என் காதலன்---பிரிவாற்றாமை

ஆசை முகமறந்து போச்சே-இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தோற்றம்-அதில்
கண்ண னழழுமுழு தில்லை;
நண்ணு முகவடிவு காணில்-அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்

ஓய்வு மொழிதலுமில்லாமல்-அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய்-அந்த
மாயன் புகழினையெய் போதும்.

கண்ணன் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போல-ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும்-இந்த
வைய முழுதுமில்லை தோழி!

கண்ணன் முகமறந்து போனால்-இந்தக் 
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய்-இனி
வாழும் வழியென்னடி தோழி?
 

7.கண்ணம்மா-என் காதலி---காட்சி வியப்பு

சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி,-கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும்
நக்ஷத் திரங்க ளடி!

சோலை மல ரொளியோ-உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கட லலையே-உனது
நெஞ்சி லலைக ளடி!
கோலக் குயி லோசை-உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்ம தியில்-வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ?-இது பார்.
கன்னத்து முத்த மொன்று!


8.கண்ணம்மா-என் காதலி---பின்னே வந்து நின்று கண் மறைத்தல்

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள்.

“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
 சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,

1 comment:

  1. பாரதியின் பாடல்களுக்கு ஏற்ற படங்கள்! அக்கால நிலையைச் சித்தரிக்கிறது.சிறப்பு!

    ReplyDelete

Translate