போகி பண்டிகை
"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
ஆனால் இப்போதெல்லாம் போகியன்று "டயர்'களைக் கொளுத்தும் மூடத்தனம், பரவலாக நடக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசு படுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன. ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள். என்னதான் காவல் துறையினர் எச்சரித்தாலும், வீட்டுக்கு ஒரு காவலரையா நிறுத்த முடியும்? எனவே நாமே சமுதாயக் கட்டுப்பாடோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து, நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.



கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள். நகரங்களில் ஏனோ தீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகை பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அது சரி, "மாடுகளை மேய்க்க மந்தைவெளி இங்கு இல்லையே' என்ற பாடல் வரிகள் கூறுவதும் நியாயம்தானே?
எது எப்படியோ... பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!
பொங்கல் அன்று சூரிய வழிபாடு
சூரியனின் பேருதவியின்றி எந்த ஓர் உயிரினமும் தனது உணவைப் பெற்றுவிட முடியாது. அதுமட்டும் அன்று! புவியின் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் ஒவ்வாதவற்றை அழித்து, அவற்றின் சுகாதாரமான நலவாழ்வை உறுதி செய்வதும் சூரியனே! இயற்கைப் படைப்புகளின் அழகின் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கும் மூலாதாரக் காவலனாக விளங்குவதும் சூரியன்தான். உலகின் தொன்மைப் படைப்பான வேதங்களில், "சூரியனின் பெருமைகள்' கூறப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது. பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது. அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம்.
மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. "ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்' என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. "ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, "வீர நடை' நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு "அங்க வஸ்திரம்' போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே! ஆனால் அக்காளைகளுக்கு செயற்கையான முறைகளில் வெறியூட்டுவது தவறு. தக்க மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, அதன் வீரத்தை வளர்ப்பதே விவேகமான செயலாகும். வீட்டில் பட்டிகள் பெருகவேண்டும் என்பதும் அவை தமது செல்வம் என்றும் மக்கள் கருதி வாழ்ந்தனர். இதனால் மாட்டுப் பொங்கலைப் பட்டிப்பொங்கல் என்றும் அழைப்பர்.
திருவள்ளுவர் தினம்
திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை.
"உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை' என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர். நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை. திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான "வள்ளுவ பூஜை'யாகும். இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
காணும்பொங்கல்
பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது "கனு' பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
முடிவுரை:
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், "சூரியனை' கண்ட பனிபோல விலகட்டும்! அதற்கு அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!
No comments:
Post a Comment