Search This Blog

Monday, January 10, 2011

நினைவில் நிற்கும் பாரதியாரின் ஞானப் பாடல்கள்


1. அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2

2. ஜய பேரிகை
பல்லவி
ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா!



சரணங்கள்
பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம் (ஜயபேரிகை) 1

இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம். (ஜய பேரிகை) 2

காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். [ஜய பேரிகை) 3

3. உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.


4. ஆத்ம ஜெயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ?-அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு ப்ராசக்தியே! 1

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ? 2


5. அறிவே தெய்வம்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ? 1

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ? 2

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? 3

வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. 4

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே. 5
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

No comments:

Post a Comment

Translate